Sunday, June 21, 2009




நம்பிக்கை

சரியான வார்த்தை தேடி
சலித்து போன கவிஞனாய்
என் வாழ்வு!

வேர்வையில் விளைத்த விருட்சங்கள்
வெறுங்கை நிரப்பக்கூட விறகு
தரவில்லை!

காலம் செலவாக்கி
காத்திருந்தும் கடைசியாய்
வரவேற்றது என்னவோ
வெற்றியின் எதிர்ப்பதம்
தான்!


விரக்கதியின் விமான கூரையில்
வானம் கூட மறைந்து போனது
நாம் மனிதர்கள் என்றே
மறந்து போனது!!

அவமான அனலில்
சுடப்பட்ட என்
தன்மானம்!

பலவழியில் பயணம்
செய்தும் தொடங்கிய
இடத்திலே மீண்டும்
நான்!

கடற்கரை சென்றேன் - உப்புநீரால்
காயத்துக்கு ஒத்தடம்
கொடுக்க

இடறியது ஏதோ ஒன்று
எடுத்துப்பார்க்கையில்,
எனக்கென்றே எழுதப்பட்ட
இயற்கையின் கவிதையொன்று!

மனம் வாசித்த வரிகள் - இதோ
தங்களின் பார்வைக்கு

நம்பிக்கை சூரியனை சுற்றியே
வரையப்படும் வாழ்க்கையின்
வட்டப்பாதை...

ஏமாற்ற முன்னுரை இல்லா
இன்ப புத்தகங்கள்
எதுவுமில்லை!

கனவின் கைகள் தான்
நாகரிக உலகின்
கதவை திறந்திருக்கிறது

தவறும் முயற்சியும்
பெற்ற மழலைகள்
நிரம்பிய குடிலே
நம் கிரகம்!

உள்ளங்களின் கலவி
மொழிகளின் ஜனனம்!

இருட்டில் தவிக்கும் இரவிற்கு
துணையாய் மின்சார விளக்கு!

இறைப் பணியின் இரகசியம்
சொல்லும் மனித
மருத்துவம்!

காசி புலவர் பேசும் உரையை
காஞ்சியில் கேட்க விழைந்த
பாரதியின் படைப்புகள்
தாங்கிய காகிதம்!

கால் நடைக்கு ஓய்வு
கொடுத்த வாகனங்களின்
வரவு!

ஆதியும் அந்தமும்
அளவிட துடிக்கும்
அஞ்ஞானத்தின் விஞ்ஞானம்!

தூரமும் நேரமும்
பாதிப்பதில்லை தொலைபேசியின்
தொடர்புகளை..


இப்படியாக,
வெள்ளை பலகையில்
வானவில் தீட்டிய பல
இலட்சிய வண்ணங்கள்!

நாம் பாதம் பதிக்கும்
நானிலமும் நின்றே இருக்கிறது
வான்வெளியில்!

நாளையும் ஞாயிறு வரும் என்றே
நம்பிக்கையில் உறங்க செல்கிறது
பூக்கள்!

முகவிழி இழப்பினும்
முன்னோக்கி நகரும்
நகங்களின் கால்கள்!

முடிவின் முடிவை
மாற்றிகொண்டே இருக்கும்
தொடக்கங்கள்!!

வெற்றியின் வரவேற்பறைக்கு
தோல்விகளே வாசற்படிகள்

சரிந்து இருக்கும் நிழலின்
உருவம் மட்டுமே நிமிர்ந்து
நிற்க முடியும்!

தடை போடும் கற்களில்
தாளம் போடும் நதியாய் - நாம்
மாறிட வேண்டும்

துயிலும் நேரமும்
துடித்தே இருக்கட்டும்
நம்பிக்கையின்
இதய துடிப்புகள்!


உளிகள் கொடுக்கும் வலிகள்
உண்மையில் கடவுளை
காணத்தான்!


உற்றுநோக்கு,
முற்றுப்புள்ளியும் காற்ப்புள்ளியாகும்
இடமிருந்தால்!!


உழைப்பின் வெளிச்சத்தை
அணையாது காத்த
கருணை கடலுக்கு
நன்றி சொல்ல மேலே பார்த்தேன் - அங்கே
தன் முகம் மறைக்கும்
முகில்திரையை
கிழித்து கொண்டிருந்தது
வானம்!!