Friday, December 07, 2007

ஊடல்…

கவிதையோடு ஒரு பேச்சுவார்த்தை…

வார்த்தை தராமல் அடம் பிடிக்கும்
என் செல்லமே...

உயிர் மட்டும் போதுமா
உருவம் வேண்டாமா ?

உன்னை புனைவதால்
குறையாது நின்னழகு
மாறாக கூடும்!

நான் தவித்த வேளையில்
நீர் வார்த்த நாட்கள்
ஞாபகம் இல்லையோ?

மறந்து போனேன்
என்ற கோபமா?
முகம் காட்ட மறுக்கிறாய்!

தவறே செய்தாலும் தள்ளிவிடாதே தோழி
தோளில் சாயத்து தண்டனை கொடு!

இழந்து போனேன் என்னை
இறுக்கி பிடிக்கும் பணிகளால்

தொலைந்திருந்த நான் தேட தொடங்குகிறேன்
உன்னில் என்னை மீண்டும் தொலைப்பதற்கு!

பள்ளிப் பருவத்தில் என்னுள்
பதியம் போட்டாய் உன்
விதையை!

கல்லூரி காலத்தில் நாடு கடத்தினாய்
ஆனால்
மென்பொருளின் வன்மையிடம்
தோற்று போனாய்!

பிரிவின் வலியை கூட
உணராமல் உணர்வுகளை
உணவாக்கி கொண்டது
உணவு கொடுக்கும்
வேலை!

பாசி படர்ந்த குளமாய்
பழுதாகி போனது மனம்!

ஒவ்வொரு தனிமையும்
தவறாமல் என்னை கேட்கும்
நாம் சேர போகும்
தருணத்தை பற்றி !

விடைக் கொடு கேள்விக்கு
விடைக் கொடுக்காதே நம் காதலுக்கு !

உனக்கென்று உறவுகள்
பல இருக்கலாம்
உள்ளத்தோடு சிலர்
உறைந்திருக்கலாம் - என்றாலும்

உண்டு எனக்கோர் இடம்
நான் இறந்த பின்பும்!