Thursday, December 31, 2009


போய் வா தோழி

மௌனமான கண்ணீரின் கனத்தை
தாங்கிடாது முறிந்து போன
ஒரு கிளையின் காட்சி
நின் தரிசனம் வேண்டி!


இன்றிரவை தொடரும் விடியலில் என்
நட்பின் இதயம் களவாடப்பட்டிருக்கும்
!

இறப்பற்ற காலத்தின் இறந்த கால
ஏட்டில் எழுத தயாராய்
நம் உறவு

நான் கொடுத்து நீ உடனே
படிக்கும் இந்த கடைசி
கவிதையில் இடம் பெற
மறுத்து என்னோடு
சண்டை பிடிக்கும்
வார்த்தைகள்...

முட்டி நிற்கும் சோகத்தின்
முடிச்சு அவிழ்க்க கற்றவளே,
கண்களுக்கு கனவு பாடம்தானோ
இனி உன் முகம்?

நெஞ்சம் நனைத்து நீ
வழிய விட்ட சொற்கள்
இனி காணாது போனவர்கள்
பட்டியலில்..

உறக்கத்தின் உதவியால்
உன் மேல் நான் சாய,
உதிர்ந்து போகும், உள்ளத்தில்
கூடு கட்டிய கவலைகள்!

செல்லம் என்று நீ என்னை
விளிக்க உன் உதட்டோரம்
காத்திருக்கும் என் காதுகள்!

இறுக பற்றும் உன் கரத்தின்
பிடியில் அழிந்து போகும்
என் மன அழுத்தங்கள்

பசலை அரவம் தீண்டலில்
பாழாய் போன எண்ணங்கள் !

வராத நேற்றை போல்
வாராது இருக்கட்டும் நாளை.

உலகத்து கடிகார முட்களை
ஒளித்து வைத்தால் இன்னும்
கொஞ்ச நேரம் என்னோடு
இருப்பாயா?

மேகமாய் மாறுவது
மழையாய் மடியவோ?

விரல் பிடித்து அழைத்து செல்லும்
அன்னையாய் என்னை உன்னோடு
கூட்டி செல்லாயோ?

கண்ணாடி பார்க்கும் கண்ணாடியாய்
நீளட்டும் நம் நட்பு


என் காதலியும்
உன் காதலனும்
மறந்து போக
நமக்கென்று ஒரு நாள்
வேண்டும்!

அழாதிருக்க முயற்சிக்கிறேன்
தோல்வியை அறிந்தே...
துடைக்க வா என் தங்கமே!!

முற்று பெறாத இந்த கவிதையாய்
முடிவு மறந்து இருக்கும்
என்றென்றும் உனக்கான என்
அன்பு!