Friday, October 29, 2010

என்னுரை:
முதல் முறையாய் முதலும் முடிவும் இல்லா என் இறைவனைப் பற்றி ஒரு சிறு கவிதை...

காணிக்கை!

சாய்.....

சப்தக்கூண்டில் சிக்காத
சிட்டுக்குருவியை
சிறை வைத்திருக்கும்
நிசப்த வானம்!

இதயம் விரிய
இதழ்கள் குவிய
அலர்ந்திடும் மலர்!

அவன்
நேத்திரங்களின் பனித்துளியில்
நித்தமும் கழுவப்படும்
அடியவர்களின்
சூரிய வினைகள்!

அவன்
அதரம் வழியே
கசிந்திடும் கருணையை
ஏந்திப் பிடிக்கும்
எங்கள் கரங்கள்!

அவன்
கை விரல்
இடையில் தென்படும்
கால் விரல்களே
பாதையாகும்
விழியுள்ள குருடர்களுக்கும் !

மரம் விலகும்
இலையின் அமைதி
அணிந்திருக்கும்
அவன் முகத்தில்
உறங்கியே போகும்
எங்களின்
ஓராயிரம் கவலைகள்!

நம்பிக்கை நூல்
அறுந்துப்போன
மன ஆடையை
மீண்டும் மீண்டும்
தைத்து தருவான்
பொறுமையாய்!

இறைஞ்சுவும் வேண்டுமோ
எங்கள் எம்பிரானை?
வா என்று ஆணையிட்டாலே
வந்து நிற்பான்
சேவகனாய்!

போதும் என்றாலும்
உணவிடும் அன்னையாய்
ஓயாது அருள்
அளித்திடுவான் அன்புத்
தந்தையாய்!

நெருப்பைத் தவறி
மிதிக்கும் முன்னே
தட்டி விடுவான்
தோழனாய்!
மீறி தொடர்ந்தால்
தலையைக் குட்டிடுவான்
ஆசிரியனாய்!
பின்னே
கொப்பளங்களை அவனே
குணப்படுத்துவான்
களிம்பாய்!

மழலையின்
உறக்க சிரிப்பில்
மறந்து போகும்
உலகமாய்....
உன்னை தொழும்
நாங்களும்!

Saturday, October 23, 2010

என்னுரை:
சாயை மட்டுமே உலகமாய், உலகமே சாயாய் பாவிக்கும் அப்பாவிற்காக இந்த சிறு முயற்சி. கௌரிவாக்கத்தில் பாபா ஆலயம் அமைத்து சாயை எனக்கு மிக அருகில் கொணர்ந்த அப்பாவிற்கு நன்றி. இந்த ஆலயம் பற்றியும், அப்பாவைப் பற்றியும் மேலும் அறிய: http://www.shirdisaibabatemples.org/2009/04/shirdi-sai-baba-temple-gowrivakkam.html

அப்பாவிற்காக...


மறை வேதமாய்
மலர்ந்திட்ட எங்கள்
அப்பாவைப் பாட
மனிதன் கொண்ட
மொழிகள் போதவில்லை!

பனி உறைந்திருக்கும்
மேனியில்
உலாவிடும்
வைகறை மேகங்கள்!

ஆண்டவன் வசித்திருக்கும்
அவர் அகம்!
அன்பர்களுக்காக எழுப்பினார்
அவர் ஆண்டவனின்
அகம்!

தன்
நாவின் துனியால்
நித்தமும் சாயின்
நாம யக்னம்
செய்திருப்பார்
தளர்ந்த மனங்களைத்
தாங்கிடும் தாயுமானவர்!

சுற்றமெல்லாம்
சூனியப் பேச்சுகளை
சுவைத்திடும் வேளையில்
சக தோழனான
சாயோடு சம்பாஷித்திருப்பார்!

நாளெல்லாம்
பக்த சேவை
புரியும் பாபாவின்
களைப்பைப் போக்கும்
கலையைக் கற்றவர்!

வாசற்படியைக் கூட
தாண்டியதில்லை...
பெரு வெளியில்
நிகழ்பவை யாவும்
பெயரேடு கணக்காய்
வாசித்திருப்பார்!

"வா கண்ணா!" என
வாஞ்சையோடு விளிக்கையிலே
முகமற்ற உணர்வுகளால்
முகிழ்ந்திடுவோம்!

பெரிய திருமொழி
பொழியும் தருணம்
புகைமூட்டம் விலகி
இதயம் கண்ணீரால்
நன்றி சொல்லும்!

குழந்தையின் அமுதமொழிக்கு
குறையாது ஒலிக்கும்
எங்கள் குலம்
காக்கும்
பெருமாளின் குரலில்
குறையெல்லாம் தீர்ந்துபோகும்!

அறிவுரை அலர்ந்ததில்லை..
மந்திரம் பகர்ந்ததில்லை...
மலரடிகள் தவிர
வேறு கதியில்லை...

அனுதினமும்
அருள் அமுதை
அவர் சுரக்க..
வந்தோரின்
வயிற்றுக்கு அமுதை
இவர் படைக்க..
ஆலயம் கொண்ட
இருவரும்
அட்சய பாத்திரங்கள்!

சீரடிநாதனோடு
சேர்ந்து வாழா
பெரு வாழ்வை
சுட்டெரிக்கும் ஏக்கப்
பாலைவனத்தில்
பன்னீர் மழையாய்
இவரோடு
சம காலத்தில்
எங்கள் பிறவிப்
பயணம்!

ஸ்தூல தேகத்தில்
அவனை சேவிக்காத
எங்களின் ஊனக்கண்கள்
இவரையும் இறையெனக்
கொள்ள
உள்ளமெல்லாம்
நெகிழ்ச்சிப்பூக்கள்!

எழுதி முடித்ததும்
எனக்குள் ஒரு வினா
ஆண்டவனும் அப்பாவும்
நேரென கொள்வதோ?

அண்டத்தின் முதல் நொடி
அறிந்திடாத அறிவாக
படிக்க விரித்தேன்
பாபாவின் சரிதத்தை...

ஆச்சர்யம்...

அன்றே தெளிவாக்கப்பட்டது
அடியவனின் இன்றைய
சந்தேகம்!

முடிவற்ற பாபாவின்
முடிவான வார்த்தைகள்..

"நல்ல பக்தன்
யாவரையும்
நானென கொள்"

Saturday, July 17, 2010

மெய்யாலணையும் பொய்!


காட்சி மெய்
காண்பவை பொய்!

ரசனை மெய்
ரசிப்பவை பொய்!

சிந்தனை மெய்
சிந்திப்பவை பொய்!

பிறப்பு மெய்
பிறப்பவை பொய்!

இறப்பு மெய்
இறப்பவை பொய்!

உணர்வு மெய்
உறவு பொய்!

தேடல்கள் மெய்
தேவைகள் பொய்!

வினாக்கள் மெய்
விடைகள் பொய்!

நாளை மெய்
நான் பொய்!

Friday, May 28, 2010

மீண்டு(ம்) நான்...

முதல் முறையாய் ரத்தத்தோடு
தன்னையும் சுத்தப்படுத்தி கொண்டது
இதயம்!

விதைக்கப்பட்டவை அறுவடையாகி
பாரம் நீங்கிய பூமியாய்
மனம்!

மலர்கள் சமைத்த பாதையில்
பத்தியமாகிடும் முட்கள்!
கால்களின் வழியே
வெளியேறும் கடந்த கால
தவறுகள்!

மாறுதலில் மையம்
கொண்டதே மானுடம் - ஆயினும்
மறுதலித்து மறுகி
மடியவே சம்மதம்!

தினம் ஓர் ஆடை கொண்டாலும்
திருப்தி அடையாத வானமாய்
நாம்!

இரவல் வாங்கியே எழுதி
கொண்டிருக்கிறோம் நம்
சொந்த வாழ்க்கையை
இரவலென்று தெரியாமலே..

பிண்டத்தில் தொடங்கி மண்
பிண்டத்தில் முடியும் வரை
செதுக்கவே செலவிடுகிறோம்
பிறர் பார்வைக்காக.

நிழல்களுக்கு வண்ணமிட்டு
நிஜங்களை மறைக்கிறோம்
நீர்குமிழிக்கும் நிரந்தரம்
கற்பிக்கிறோம்!

நிரந்தரமென்று ஏதுமில்லை
நிரந்தரமானவை நேசிக்கப்படுவதுமில்லை!

சுமந்தவை சுகமாயினும்
சுட்டெரிக்கப்பட வேண்டும்
ஒரு நாள்!

ஆசையும் பயமும்
சரிபாதியாய் பங்கீட
தலை அனலிலும்
பாதம் புனலிலும்!

உயிர் மறைந்திருக்கும்
உடல் மறையும் வரை
தெரிவதில்லை,
உண்மைக்கும் உயிர்
ஓரளவுக்கு தான்
என்ற உண்மை!

ஒரு இழவு வீட்டில்
பிறக்கும் தத்துவமெல்லாம்
இரண்டு உள்ளங்களின்
சங்கமத்தில் இறந்துவிட
கண்பொத்தி விளையாட்டாய்
கழிந்து போகும்
கனவு நிரப்பிய
கானல் நாட்கள்!

முன்னுரையின் முகம்
தெரியவில்லை
கடைசி வார்த்தை எதுவோ?
அறியவில்லை
இடைபட்ட பக்கங்களை
நிரப்ப எங்களோடு
சேர்ந்து இன்னும்
எத்தனை பேரோ?
ஏதும் செய்தி இல்லை!

கலங்கிய குட்டையில்
கிறுக்கல்களிட்டே
நீர்த்து போகும் இந்த
நீர் துளிகள்!


Thursday, May 27, 2010

இனியேனும் தொடங்குவோம்



காலம் கொடுத்த இயற்கையே - நீ
காலாவதியாகும் நாள் எந்நாளோ?

முதல் உயிர் கண்ட உன்
மூச்சு நிறுத்தும் எங்கள்
முயற்சி முடியும் நாள்
எந்நாளோ?

ஒன்பது கிரகங்களில்
ஒன்றை மட்டும்
நேசித்தாய்!
இப்பாவிகளை படைத்தும்
இன்னும் எப்படி நீ
ஜீவிக்கிறாய்?

நீ அழுத கண்ணீரை
மழையென்றோம்
அடிக்கடி நீ அழாதிருக்க
மரங்களை மரணத்திற்கு
கொடுத்தோம்!

ஆவியாகும் நீர் மேகமாக மறுக்கிறது
அழும் குழந்தைக்கு தன் கண்ணீரே
குடிநீராகுது!

காட்டை அழித்து நகரமாக்கி
மனிதர்கள் நாங்களே அங்கே
மிருகமானோம்!

மின்சாரம் புணர்ந்தே உன்
மேனியெல்லாம் சூடாகி போனதே!
சூரியனும் வலி தாங்காது
ஓடி ஒளிய இடம் தேடுதே!

நீ சிறு வயதில் கட்டிய
பனிப்பாறைகள்
கார்பன் கடலலையில்
மண் கோபுரமாய்
கலைந்து போனதே!

ஒடிந்து போன முதுகெலும்பில்
கட்டிட மூட்டைகளை கிடத்தினோம்
நீ தாங்காது நெளிந்த போதும்
நிறுத்த மறுத்தோம்!

சுனாமியாய் சீறிப்பார்த்தாய்
சரியாகவில்லை நாங்கள்
இப்பொழதும் வெற்றிலைக்கு
சுண்ணாம்பாய் நீதானே!

இன்னும் எத்தனை நாள்
இயற்கையின் எதிரியாய் நாம்?

இரவை பகலாக்கும்
இம்சைதனை குறைத்திடுவோம்!
சொட்டுநீரை கூட வீணாக்கும் எவரையும்
இ.பி.கோ வில் அடைத்திடுவோம்!

ஆளுக்கொரு மரம்
சொந்தமாய் வைத்திருப்போம்!
அது மரிக்கும் தருணத்தில்
ஆயிரம் மரச்செடி நட்டு
அஞ்சலி செலுத்துவோம்!

அவசியமன்றி
விரையும் வாகனங்களில்
விரையமாகும் எரிபொருளை
தடுத்திடுவோம்!

விதியை மீறுபவர்களுக்கு
நாற்பது நாள்
நடைபயண தண்டனை
விதித்திடுவோம்!

பயன்பட்ட பின்னும்
மறுப்பிறவி எடுக்கும்
பொருட்களை பயன்படுத்த
தவறோம்!

இனியேனும்
தாமதமின்றி தொடங்குவோம்
நம் சந்ததிகள்
தரணியில் வாழ
தரணியை காண!




Saturday, March 06, 2010

இன்னொரு காதல் கதை...

இரவின் அழகை வாசிக்கும்
மெழுகுவர்த்தியின் நாவை
நறுக்கும் காற்றாய்
காலம் 
உடைத்த 
காதல் தாழி  

காதல் பத்மவியூகத்தில் நுழையும்
மன அபிமன்யுகள்
மணக்கதவைத்
திறக்கும் முன்னே
மாய்ந்து போக,
பிரிவின் வெளிச்சத்தில் புதிதாய்
சிக்கிய விட்டில் பூச்சிகளாய்
நாம்!

நிலக் காதலிக்கு
மரம் தரும்
இலை முத்தங்களாய்
பரிமாறப்பட்ட பாசங்கள்
சத்தமின்றி சருகுகளாய்
புதைக்கப்படுகின்றன!

ரசவாதமா? ரசாயன மாற்றமா?
அறியோம்...
இடைவெளி பள்ளத்தாக்குகளில்
நம் காதல்
செய்த தற்கொலை
செய்தி கேட்டு
உறைந்தோம் ஒன்றாய்..

ஓய்வறியா செவிகளும் இதழ்களும்
ஓயாது நன்றி சொல்லும்
என் உயிர் தழுவிய
உன் உறவின் உயிர்த்துறவுக்கு

வளைக்கரம் வளைத்த என் தோள்கள்
வேறொருத்தியின் தீண்டலுக்கு
தயாராக...
உன் இமைக் கதவுக்குள்
நசுங்கி விட இன்னொருவன்
காத்திருக்கிறான்
நானும் என் மனைவியும்
உன்னோடு எடுத்த
"புகை"ப்படத்தில் தெரியும்
காதல் "நெருப்பு" மறைந்த
தடம்!

காதல் மயக்க உரைகள் யாவும்
மது போதை உளறல்களாய்
மாறிப் போனதே!

வருடங்களை வினாடியாய்
மாற்றிய மந்திரமே!
வேண்டாத போது
விருந்தளித்தாய்
வேண்டிய போது
விலகிக் கொண்டாய்...

என்னை மடியில் கிடத்தி
சொர்க்கம் சேர்ப்பித்த
பெண்ணே,
நரகம் மட்டும் நான்
காண நீ எங்கே
சென்றாய்?

இந்த நரன் இங்கே
கிழிக்கப்படக் காணாது
அங்கே நீ
நஞ்சமுது உண்கிறாயோ?

என்னை நனைத்த உன்
அலைகளில் நான்
மூழ்கிப் போவேனோ?
பயத்தின் பசிக்கு
நீ இரையானாய்…
இறையை நம்பாது
ஆதலால் நம் மனிதக்காதல்
இனி அமரக் காதலாய்...

நிழலாய் மட்டும் இருக்கும்
நிஜமே!
எது நீ?
நேற்றா? இன்றா?
நாளையா?

வேண்டாப் பக்கத்தைத் தாண்டும்
புத்தக விழிகளாய் பழக்கப்படுத்தி
எதார்த்தம் என்று
மொழிவது சரியோ?

நிகழ்வுகள் நிரப்பி கொண்டே வந்தாலும்
நினைவுகளை சரிபார்த்து கொண்டு வரும்
சூத்திரம் என்ன?

வாழ்க்கையின் பகுதி
காதலென்று விளம்பும்
ஞானிகளே!
வந்து என் நினைவுகளை
கழற்றிப் போடுங்கள்
செய்தால் உங்களுக்கு
திருஷ்டி சுற்றி
நான் போடுகிறேன்!

Sunday, February 28, 2010

மரணம் இல்லா ஜனனம்!

முன்னுரை:
எப்பொழுதும் என்னுடைய கவிதை இடம்பெறும் என் வலைப்பூவில், மாறுதலாய் முதல் முறையாய் என் தோழியின் கவிதை.

வயது என்னும் ஒரு விஷயம் உறவுக்கு கிடையாது, உறவில் இருப்பவர்களுக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில், நட்பு எங்கள் இருவரை தேர்ந்தெடுத்தது. இணையம் அதற்கு ஒரு கருவி. என் தோழிக்கு கவிதை மீதும் அளவுக் கடந்த காதல். எங்கள் நட்பை இதில் அழகுப்படுத்தி பார்த்து உள்ளார்கள்.

சுய விளம்பரத்திற்காக இதை இங்கே பதிவு செய்யவில்லை. என் குரு திரு சுஜாதா சொன்னது போல், இணையத்தில் ஒன்று இடம்பெறும் போது அது சாசுவதமாகிறது. சாசுவதமான நட்புக்கு செய்யும் பிரதி உபகாரமாகவே இதை நான் கருதுகிறேன்.
இறுதியாய் ஒரு முறை, "Thank you So Much" mam!!!

இனி அவர்களின் படைப்பு உங்கள் பார்வைக்கு....
--------------

கவிதைக் காகிதத்தை
நேசித்த எனக்கு
கணிணியின் நுட்பத்தை
நுகர தெரியவில்லை!
கணிணியை திறந்தால்
உலகம் காணலாம்
கற்றோர் அனைவரின்
ஏகோபித்த கருத்து
கணிணிகள் அனைத்தும்
யசோதா கிருஷ்ணனோ?
இணையத்தளத்தில்
இறைமை இருக்குமோ?

ஆர்வம் சிறிதாய்
அகத்தில் பூக்க
ஆர்க்கூட்டில் நானுமோர்
அங்கமானேன்
விழிகள் தேடின
எதைத் தேடுகிறோம்
என தெரியாமலே
வியப்போ வியப்பு!
வேண்டாமலே கிடைத்தது
வேண்டியது
கண்களை ஈர்த்தன
கனித்தமிழ் சொற்கள்!

'உலகம் யாவும் நானே!'
ஒ! உன் 'நானே!'
'நான்' ஒலிக்கவில்லை
'நாம்' உணர்த்தியது
மூளையின் உத்தரவிற்கு
காத்திராமல்
என் விரல்கள் தானே
க்ளிக் செய்தது
விரிந்தது உன் வியனுலகம்!

முகமோ, நிறமோ
ஈர்க்கவில்லை எனை!
நாடு பார்த்தேன் - இந்தியா
அமெரிக்காவில் நீ இருந்தாலும்
தெருக்கோடியில்
உணர்ந்தேன் உன்னை,
ஊர் பார்த்தேன் - சென்னை
அட! என் ஜன்னல் திறந்தேன்
எதிர் வீட்டில் நீ!
உன் ஆர்வம் படித்தேன் - தமிழ்
ஹை! என் வீட்டுத் திண்ணையில் நீ!
உனக்கு பிடித்த எழுத்தாளர் பார்த்தேன்
ஆஹா! அந்த நிமிடம் முதல்
என் இதயத்தில் நீ!
சிறய அறிமுகத்துடன் யாசித்தேன்
உன் உன்னத நட்பை...
யோசிக்காமல் நீட்டினாய்
உன் சிநேதிதக் கரத்தை....
தொடாமலே Scrap ல் உன்
ஸ்பரிசம் உணர்ந்தேன்!

மாதம் ஒருமுறை சின்ன 'ஹாய்'
பருவத்திற்கொருமுறை நலம் விசாரிப்பு
விடுபட்டுப் போனதா நட்பு?
இல்லை! விடுமுறையில் போனது!

பள்ளி திறந்தும் வகுப்பிற்கு
வரும் சிறுவன்போல் சிகாகோவிலிருந்து
சென்னை வந்தாய்!
ஜனித்திருந்தாள் என்னுள் ஜனனி
பரிதவித்தது மனம்.
எதற்காக?
என் படைப்பின் முதல் சுவாசத்தை
உன் விழிகள் வாசிக்க
இதயம் நேசிக்க!

ஆபத்து வரும்போது மட்டுமே
ஆண்டவனைத் தேடும் பக்தைபோல்
அவசரமாய் ஆர்க்கூட்டில்
தேடினேன் உன்னை
இன்ஸ்டன்ட் கடவுளாய்
பிரசன்னமானாய் நீ!
நாலைந்து scrap ல்
நம்பர் வாங்கினேன்
முதல் அழைப்பிலே
மூன்றாண்டு தோழமை!
தகவல் பரிமாற்றத்தில்
பிரயாணம் செய்தன
இசையும், இலக்கியமும்!

அறிவாலயத்தில் நேர்முக அறிமுகம்
சிவப்பு சட்டையில் வெள்ளை சிரிப்புடன்
தொட்டுக் கைக்குலுக்கினாய்
உணரவில்லை ஸ்பரிசம்
அது தான் நட்பின் ரகசியம்
மேடையில் பேசியது
ஏழு வருட ஆத்ம நட்பு!
பக்கத்தில் கரமுயர்த்தி ஆர்ப்பரித்தது
ஏழு மாத அறிமுக நட்பு!
அன்று என் அகம்
அதிகம் ரசித்தது
அறிமுக நட்பை!

விடைபெற்று சென்றாய் பைக்கில்
ஆட்டோவில் அருகில் உணர்ந்தேன் உன்னை
அதன்பின் ஒவ்வொரு நாளும்
வடகிழக்கு பருவக்காற்று
வீசியது நம்
நட்புச் சோலையில்!

குறிஞ்சிப் பூக்கள் தினம் தினம்
பூக்கும் அதிசயம் நடந்தது!
என் படைப்பு தொடர்ந்தது
நீ என் நண்பன் - அது மகிழ்ச்சி!
ஜனனியின் ரசிகன் - அது
இரட்டிப்பு மகிழ்ச்சி!
"இனிது! இனிது!" இனிதாய் முடிய
ஓர் உந்து சக்தி நீ!

கடந்த மாதம் உன் blog ல்
கவிதைகளுடன்
கைகோர்த்து நடந்தேன்!

உன் 'சிகாகோ பயணம்'
அதில் அந்நிய தேசத்தை
அளவளாமல்
மனிதநேயம் பகர்ந்தாய்
நட்புலகை வியந்தாய்
அயல்நாட்டில் அன்புத் தமிழாய்
உலா சென்றாய்
அதுவே தமிழின் பெருமிதம்!

'தொலைந்த போன நட்பில்'
நீ தொலையாமல் கிடைத்தாய்
தொலைந்த நட்பில் - உன்
முகவரியை காட்டினாய்!
காணாமல் போனவர்களை
தொலைக்காட்சி மூலம் தேடுவார்கள்
நீயோ, உன் கவிதையில்
தேடுகிறாய்!
கொடுத்து வைத்தவர் யார்?
உன் தோழியா? நீயா?
இருவரையும் ரசிக்கும் நானே!

'மார்க்கெட் பாட்டி'
உண்மையை மெச்சி
உழைப்பை உச்சி முகர்ந்து
உன்னையே உயர்த்தி விட்டாய்!
பாட்டியை தரிசித்த உனக்கு
புத்தகம் வாசித்த நிறைவு!
எனக்கோ, அகராதி புரட்டிய உணர்வு!
மார்க்கெட் பாட்டியிடம் சொல்
உன் கவிதையின் கதாநாயகி யானதால்
அவள் மார்க்கெட் உயர்ந்து விட்டதென்று!

"போய் வா தோழி!"
எங்கு போனாள்?
நிரந்தரமாய்த் தங்கிவிட்டாள்
உன்னிலும், உன் எழுத்திலும்
அவளைக் கேட்டால் சொல்லுவாள்
அவள் எழுதாத கவிதையில்
நிரந்தரம் நீயடா! என்று

"சராசரி"
இல்லைகளை அடுக்கி
இருப்பவைகளை நிரப்பிய
அதிசயக் கவி நீ!

ஆர்ப்பரிக்கும் அலைகடலல்ல நீ!
சங்கீதமாய் சலசலக்கும்
சிற்றோடை!
வேகமாய் கருத்துரைக்கும்
புயலல்ல நீ!
விவேகமாய் தவழ்ந்து வரும்
தமிழ் தென்றல்!
பிரமிக்க வைக்கும்
பெருமலை அல்ல நீ!
அண்ணாந்து பார்க்க வைக்கும்
சிறு குன்று!
என் வீட்டுத் தொட்டியில்
நான் வளர்த்த வீட்டுப் பூ அல்ல நீ!
பிரபஞ்சத்தை ரசிக்க வைக்கும்
கணிணியில் நான் கண்டெடுத்த
நட்புப் பூ!

என் படைப்பு உனக்கு பிடிக்கும்
என் செல்ல படைப்பிற்கோ
உன்னை பிடிக்கும்!
எவ்வளவு?
உலகை விட, உயிரை விட!
உடன் பிறவாமலே
சகோதர பாசத்தில்
விளையாடுகிறீர்கள்
நீயா? நானா?

யார் ஜெயித்தாலும்
அடித்துக்கொள்கிறீர்கள் HiFi
கைபேசியில் பேசினாலோ பேரிடி
குறுந்தகவலிலோ குற்றால அருவி
உங்கள் பாசமழைச் சாரல்
சில சமயம் என் முகத்தில்
சிறிதாய் அடித்தால்
சிலிர்த்து போகிறேன் நான்!

நட்பினால் நமக்குள் ஒரு பரிமாற்றம்
நீ 27 year old,
நான் 41 year young
இது எப்படி?
என் எழுத்தில் நம் நட்பின் ஜனனம்!
அதனால் அது வென்றது மரணம்


Sunday, February 07, 2010

சராசரி

சிகரத்தின் இல்லறவாசிகள்
சராசரிகளின் சுகம்
அனுபவிப்பதில்லை...

ஆர்ப்பாட்டம் கிறுக்காத
வாழக்கைப் பக்கங்கள்!

சாலையில் நடக்கும் போது
சகலமும் குசலம் விசாரிக்கும்
சங்கடமில்லை!

உறக்கத்திலும் பாசாங்கு
கனவை நிரப்ப வேண்டியதில்லை!

உப்பு குறைந்ததால் உஷ்ணப்பட்ட
உப்பு சப்பில்லாத சண்டைகள்
உலகோடு பகிர்ந்து கொள்ள
தேவையில்லை!

மனைவியின் செல்லப் பெயரை
மற்றவர்க்கு மார்தட்டி சொல்லும்
வாய்ப்பு கிடைப்பதில்லை!

தினசரி வாழ்வைத் தினம்
ஒரு பத்திரிகை உணவாக்கிடும்
அவலமில்லை!

அந்நிய சொந்தங்களின் அலைகளில்
சொந்தங்கள் அந்நிய கரையில்
ஒதுங்குவதில்லை!

நம்முடைய நேரங்கள் நேயர்களின்
விருப்பமாய் மாறிட
கூடுவதில்லை!

வெற்றியின் வீரியமும்
தோல்வியின் ஆழமும்
பூதக்கண்ணாடியில் சிக்குவதில்லை!

எதிர் வீட்டைப் பற்றிய
நம் பேச்சுக்கு எவரோருவர்
விமர்சனம் எழுதவதில்லை!

கவன கழுகுகளைக் கைத்தட்டி
அழைக்கும் மனித
பாம்புகளே!
புகழ் மகுடியின் இசையில்
செவிகளற்ற நீங்கள்
மயங்குவதேன்?

பெருமைக்காக உயரமிருக்க
தவமிருக்கும் ஒற்றைக்கால்
முடவர்களே!
இயல்பை எரித்து
பிறர்க்காக சுயம்
வளர்ப்பதோ?

உழைப்பு திரியில் சுடர்விடும்
திறமை தீபங்கள், தானே
காட்டும் அந்த
கர்ப்பக்கிரகத்தை.. .
அதுவரை
அமைதியாய் உங்கள்
ஆர்வங்களை தொழுங்கள்!

பிரபலமான முகங்களைத்
தயாரிக்கும் முகமில்லா
என்னை போல்
சராசரிகளுக்கு இந்த
கவிதைச் சமர்ப்பணம்!