Sunday, October 25, 2009

மார்கெட் பாட்டி

வாழக்கை வாழ்வதற்கே என்று
நள்ளிரவு வரை வகுப்பு எடுக்கும்
எங்கள் போதி கயாவிற்கு
விடுமுறை..

பெயரளவில் மென்மை கொண்ட
தகவல் தொழில்நுட்பத்தின் வன்மை
பழகி பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்

"பசு தோல் போர்த்திய புலி" - உவமானத்திற்கு
உயிர்க்கொடுக்கும் உயிரில்லாத் துறை.

இன்றேனும்,
கணிப்பொறி காதலியின் நினைவுகள் அகல,
நூலக மனைவியை நினைத்து
புறப்பட்டேன்..

மழைக்காலம் முடிந்து பனிக்காலம் பிறந்தும்
பிறந்தகம் மறந்து தன் மரத்தோழர்களை
தேடும் வெயிலில்
சுருக்கல்கள் நெய்த ஆடைக்குள்
கசங்கிய தேகம் ஒன்று
கடையோர வீதியில்
சுண்டை வற்றல்
விற்று கொண்டிருந்தது!

இதயத்தின் ஓரத்தில் படிந்திருந்த
நம்பிக்கையின் ஈரம்
இமை துவாரம் வழியே
வடிந்திருந்தது அந்த கடுகு
கண்களில்..

வெள்ளை சுவரில் தெரியும்
கருப்பு புள்ளியாய் இவளை
கடக்காத மனிதர்கள் அந்த
மார்கெட்டில் இல்லை...


பிழைப்பின் முகவரியாய்
பிச்சை விடுத்து
உழைப்பை கொண்ட
இந்த பாட்டியின்
முன் மண்டியிட்டேன்
விலை விசாரிக்க,

மனமும் மூளையும்
சேர்ந்து கருத்தரித்த
பதிலை
நுரையீரலின் காற்று
கொஞ்சம் கொஞ்சமாய்
மேலேற்றி தொண்டைப்படிகள்
தாண்டி அனுப்பியது

சைனீஸ், தந்தூரி
உணவிற்கு அடையாளமாய்
மாறிய கூட்டத்தை சேர்ந்த
எனக்கு
வாங்க தேவையில்லை
என்று தெரிந்தும்
வாங்கினேன்
அவள் வியாபாரத்தை
தொடங்கி வைக்க..

அமிழ்ந்திருந்த விழிகளை
வெளியில் அனுப்பி
நீட்டிய ரூபா தாளின்
விவரங்களை சரி பார்த்து
சுருக்கு பை வங்கியில்
சேர்த்து கொண்டாள்

பிள்ளைகள் அற்றவளா
பிள்ளைகளால் அற்றவளா?
எதுவானாலும்
இவளின் இன்றைய நாளின்
வறுமைக்கு எதிரியாய்
மாற முடிவெடுத்து
மறுபடியும் பணம்
கொடுக்க,
காந்தி சிரித்து
நன்றி சொன்னார்...


கூனிய முதுகை
நேராக்கி தன்
உடலெங்கும் தனித்திருந்த
பலம் மொத்தம்
குறுகிய உள்ளங்கையில்
குவித்து, அதை
மீண்டும் என்னிடமே
திணித்து,
சுயமரியாதை தெறிக்க,
"உழைச்சு வரது மட்டும்தான்
உடம்புலே ஓட்டும் தம்பி"

இப்போது காந்தி
உவகையுடன் நன்றி
சொன்னார் - அவள்
கரங்களில் தவழந்த
நொடிகளுக்காக..

உழைப்பின் நேர்மை
காட்டியது அவள்
நிழல்!
அதில் இளைப்பாறி இருக்கும்
எதிலும் இலவசம் கேட்கும்
என் மக்கள்..

நூலகம் போகவிருந்த
நான் வீடு திரும்பினேன்
புத்தகம் வாசித்த நிறைவோடும்
இதை மறந்து தொழில் தருமம்
பேசி கொண்டிருக்கும்
மனிதர்களுக்கு எப்படி
புரிய வைக்க வேண்டும்
என்ற யோசனையோடும்...

Sunday, October 18, 2009

இங்கே காணப்படும் எண்ணங்கள் யாவும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு பதிலே தவிர சொன்னவர்களுக்கு எதிராக அல்ல...

ஆத்திகம், நாத்திகம், பகுத்தறிவு...
(பகுதி 1)

ஆத்திகம் என்றால்?
கடவுள் உண்டு என்பது ஆத்திகம். இது கிடையாது நான் சொல்லுவது. கடவுள் பெயரால் சக உயிரை நோகடிப்பது, எல்லோர் இடத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பது இறைவன் என்பது அறியாது இருப்பது, சாதி மத துவேஷங்கள் பாராட்டுவது - மேற்சொன்னவற்றை பின்பற்றாது, நாமும், நம்மை சுற்றி இருப்பதும், இருப்பவர்களும் இறைவனே என்று உணர்வது ஆத்திகம்...

ஆரம்பமே குழப்பமா இருக்குதே??
இந்த உலகத்தை படைத்தது இறைவன் என்றால், அவன் படைத்த ஒரு மனிதனை அல்லது உயிரை உடலால், பேச்சால், எழுத்தால், வஞ்சத்தால் காயப்படுத்துவது அவனை நீங்கள் காயப்படுத்துவது போல் தானே... ஐயா, நம்ம எல்லோரையும் உண்டாக்கியது அவன் என்றால், அப்ப நாம எல்லோரும் ஒண்ணு தானே. ஒரு அம்மாவுக்கு பிறக்கற குழந்தைகள் எப்படி வேற வேற ஜாதி ஆக முடியும்?

அப்ப ஜாதின்னு கிடையாதா?
நான் படித்த அல்லது அறிந்த வரையில், செய்கிற தொழில் கொண்டு வகுக்கப்பட்டதே இந்த ஜாதி... ஆனா இப்ப யாரும் எதுவும் செய்யும் யுகத்தில் எப்படி இது இன்னும் செல்லும்? கடவுள் மழை மாதிரி... பொதுவானவர். தயை கூர்ந்து உங்கள் அரைவேக்காடு பக்தியால் அவர் பெயரை பயன்படுத்தி பிறரை இம்சிக்காதீர்கள்.

இந்த காலத்திலும் சில ஆலயங்களில் அரிஜன மக்கள் எனப்படும் இனத்திற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து?

ஆழ்வார்களில் ஒருவர் சொல்லுகிறார்
இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின்

இப்படி செய்பவர்கள் கண்டிப்பாக கடவுளை நம்புகிறார்கள் என்று தோன்றவில்லை. இது கோயிலுக்கு மட்டும் இல்லை(இந்து மதம் மட்டும் அல்ல, எந்த மதம் இதை செய்தாலும்) ஏன் கடவுளை இருக்கு என்பவர்களுக்கு மட்டும் இல்லை. சீழ் படிந்த ஜாதி வெறி பிடித்து அழுக்காய் போயிருக்கும் மனம் படைத்த அனைவருக்கும் தான் - எப்பொழுது உணர போகறீர்கள் - நீங்கள் மனிதனாய் பரிணாம வளர்ச்சியற்று இருப்பதை?

ஒரே மதம் கொண்டவர்கள் கூட உள்ளுக்குள் அடித்து கொள்ளுவதை? (இந்து, இஸ்லாம், கிருஸ்துவம் - எங்கும் உள்ளது)
நண்பர்களே, தெரிந்த ஒரு விஷயம் தான், இருந்தாலும் சொல்லுகிறேன் - அனைத்து மதங்களும் கடவுள்களும் சொன்ன அடிப்படை செய்தி - அனைவரையும் நேசியுங்கள்,உதவி செய்யுங்கள். முடியாது போனால் - சுலபமான ஒன்று. யாரையும் துன்பத்திற்கு ஆளாகாதீர்கள். இதை விட்டு நமக்குள் யார் பெரியவர், சிறந்தவர் என்று அடித்து கொள்ளுவதில் பைசாவிற்கு கூட பயனில்லை.

கடவுள் மனிதனை பிரித்து வைத்து இருக்கிறதா?
யாரும் ஜாதி பாராட்ட கூடாது என்றும், இழிவாய் நினைத்தல் ஆகாது என்றும் ஒவ்வொரு மதத்தை சேர்ந்த தெய்வங்கள் கூறுகின்றன.உதாரணத்திற்கு, இந்து மத தெய்வம் நாராயணன் தன் அவதாரங்களில் - பிராமணனாய், க்ஷத்ரியனாய், யாதவனாய் பிறந்து உள்ளான். அவனை எல்லோரும் தொழுகின்றனர். இதே போல், ஏசுவும் ஆடு மேய்க்கும் மந்தையில் பிறந்தவரே, முகம்மது நபியும் ஆடு மேய்த்தவர் தான். இவர்களை பின்பற்றும் நாம் பிறரை குறைவாய் பார்க்க வைப்பது எது? கடவுளா ? ஒரு பறவைக்கு ஈம சடங்குகள் செய்தவன் தெய்வம் - மனிதனை மதியாது இருப்பவன் ஈனத்தின் வடிவம்.

பிறகு வேற என்ன இருக்க முடியும்?
அதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். இந்த உலகம் சார்ந்திருத்தல் தத்துவம் கொண்டது. தனக்கு தேவையான பொருட்கள் கூட பிறர் செய்து கொடுக்க, பிழையாய் பிரிவினை செய்வது எதற்காக? அதில் ஜாதி பார்க்காது குருடராய் மாறுவது ஏனோ?