Sunday, October 25, 2009

மார்கெட் பாட்டி

வாழக்கை வாழ்வதற்கே என்று
நள்ளிரவு வரை வகுப்பு எடுக்கும்
எங்கள் போதி கயாவிற்கு
விடுமுறை..

பெயரளவில் மென்மை கொண்ட
தகவல் தொழில்நுட்பத்தின் வன்மை
பழகி பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்

"பசு தோல் போர்த்திய புலி" - உவமானத்திற்கு
உயிர்க்கொடுக்கும் உயிரில்லாத் துறை.

இன்றேனும்,
கணிப்பொறி காதலியின் நினைவுகள் அகல,
நூலக மனைவியை நினைத்து
புறப்பட்டேன்..

மழைக்காலம் முடிந்து பனிக்காலம் பிறந்தும்
பிறந்தகம் மறந்து தன் மரத்தோழர்களை
தேடும் வெயிலில்
சுருக்கல்கள் நெய்த ஆடைக்குள்
கசங்கிய தேகம் ஒன்று
கடையோர வீதியில்
சுண்டை வற்றல்
விற்று கொண்டிருந்தது!

இதயத்தின் ஓரத்தில் படிந்திருந்த
நம்பிக்கையின் ஈரம்
இமை துவாரம் வழியே
வடிந்திருந்தது அந்த கடுகு
கண்களில்..

வெள்ளை சுவரில் தெரியும்
கருப்பு புள்ளியாய் இவளை
கடக்காத மனிதர்கள் அந்த
மார்கெட்டில் இல்லை...


பிழைப்பின் முகவரியாய்
பிச்சை விடுத்து
உழைப்பை கொண்ட
இந்த பாட்டியின்
முன் மண்டியிட்டேன்
விலை விசாரிக்க,

மனமும் மூளையும்
சேர்ந்து கருத்தரித்த
பதிலை
நுரையீரலின் காற்று
கொஞ்சம் கொஞ்சமாய்
மேலேற்றி தொண்டைப்படிகள்
தாண்டி அனுப்பியது

சைனீஸ், தந்தூரி
உணவிற்கு அடையாளமாய்
மாறிய கூட்டத்தை சேர்ந்த
எனக்கு
வாங்க தேவையில்லை
என்று தெரிந்தும்
வாங்கினேன்
அவள் வியாபாரத்தை
தொடங்கி வைக்க..

அமிழ்ந்திருந்த விழிகளை
வெளியில் அனுப்பி
நீட்டிய ரூபா தாளின்
விவரங்களை சரி பார்த்து
சுருக்கு பை வங்கியில்
சேர்த்து கொண்டாள்

பிள்ளைகள் அற்றவளா
பிள்ளைகளால் அற்றவளா?
எதுவானாலும்
இவளின் இன்றைய நாளின்
வறுமைக்கு எதிரியாய்
மாற முடிவெடுத்து
மறுபடியும் பணம்
கொடுக்க,
காந்தி சிரித்து
நன்றி சொன்னார்...


கூனிய முதுகை
நேராக்கி தன்
உடலெங்கும் தனித்திருந்த
பலம் மொத்தம்
குறுகிய உள்ளங்கையில்
குவித்து, அதை
மீண்டும் என்னிடமே
திணித்து,
சுயமரியாதை தெறிக்க,
"உழைச்சு வரது மட்டும்தான்
உடம்புலே ஓட்டும் தம்பி"

இப்போது காந்தி
உவகையுடன் நன்றி
சொன்னார் - அவள்
கரங்களில் தவழந்த
நொடிகளுக்காக..

உழைப்பின் நேர்மை
காட்டியது அவள்
நிழல்!
அதில் இளைப்பாறி இருக்கும்
எதிலும் இலவசம் கேட்கும்
என் மக்கள்..

நூலகம் போகவிருந்த
நான் வீடு திரும்பினேன்
புத்தகம் வாசித்த நிறைவோடும்
இதை மறந்து தொழில் தருமம்
பேசி கொண்டிருக்கும்
மனிதர்களுக்கு எப்படி
புரிய வைக்க வேண்டும்
என்ற யோசனையோடும்...

4 comments:

Anonymous said...

fantastic...
Thank you

செல்வேந்திரன் said...

good one VP

Anonymous said...

very nice.

ஞானவதி அசோகன் said...

Hi, Budha Gaya viumurai,Pillaigal atravala,pillaigalal atravala? - simply superb.Manitham noolagathai vida sirandhadhu.