Friday, July 31, 2009



என் சிகாகோ பயணம்

சந்தியா காலம்...

நாள் முழுதும் நடந்த களைப்பில்
ஓய்வு எடுக்க ஓர் மலையில் ஒதுங்கும்
சூரியன்...

நாளை என் நண்பர்களோடு நான்
கொண்டாடவிருக்கும் நண்பர்கள் தினம்...

அணு அணுவாய் நான் ரசித்த நாட்கள்
ஆல மரமாய் விரிகிறது சிறிய இமைகளின்
இடையே!

அந்நிய தேச பயணம்...
யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
என் தமிழ் சொன்னது
நினைவிற்கு வந்தது..

கூட்டை தாண்டி பறக்க ஆயத்தம்மானேன்
கேள்வி சிறகுகளை தாங்கி கொண்டு...

இறந்தக்காலமும் எதிர்க்காலமும்
நிகழ்க்காலத்திடம் தங்கள் எண்ணங்களை
பதிவு செய்து கொண்டிருந்தன!

அடுத்த கண ரகசியங்கள் முன்னமே
அறிவிக்கபடுவதில்லை..
அறிந்து கொண்டால்
ஆனந்தம் இல்லை!

சம்பாதிக்க போகும் சம்பத்தை பற்றிய
கல்பனா சக்தியில் மிதந்த
கால்கள் சிகாகோ மண்ணில்
பதிந்தது!

காண்பவை யாவிலும்
லக்ஷ்மி கடாக்ஷம் - ஊடே
திட்டு திட்டுக்களாய்
படிந்திருக்கும்
வறுமை கறை!

முதல் நாள் பள்ளி செல்லும்
மழலையாய் நான்..

மெல்ல மெல்ல தளர்ந்தது
என்னை சுற்றிய இறுக்கம்
சுற்றி இருந்த தோழமையால்..

இனிப்பின் இருப்பிடம் சேரும் எறும்பாய்
ஒருவர் மற்றொருவரை அடைந்தோம்!

பகலில் தனித்திருக்கும் நதிகளை
அந்தியில் சேர்த்திடும் குளம்பி கால்வாய்!

பாட்டி வீட்டிற்க்கு பிறகு மறுபடியும்
வாய்த்த நிலாச்சோறு இரவுகள்!

நாட்கள் நகர நகர,
நவீன நகரத்தில் நண்பர்கள் நாங்கள்
நசுக்கபட்டோம் நட்பு புள்ளியில்...

சந்தோஷ நாதம் மீட்டிய
இசை சிரிப்புகள்!
உறவின் ஆயுள் நீட்டிய
நீண்ட பயணங்கள் !
பொறுமையின் எல்லையை
சோதித்த திரைப்படங்கள்!

பணியின் சுமையை பனியில்
இறக்கி வைத்து கூட்டாக
சூதாடுவோம்...
ஜெயம் அபஜயமும்
மாறி மாறி சாமரம்
வீச அங்கேயே உறங்கி
போவோம்!

காலதேவியின் கட்டளைப்படி
பறவைகள் சில வீடு திரும்ப
சில இடம் பெயர்ந்தது !

முருக வேலுண்டு வினையில்லை
மின் அஞ்சலுண்டு எங்களுக்குள்
பிரிவில்லை!

பிரியா விடை என்று எதுவுமில்லை - ஆழமான நட்பில்
பிரிவு என்ற வினாவே எழுவதில்லை..

சட்டென்று அடித்த அழைப்பு மணியால்
கனவை கை கழுவினேன்...

பிடித்த புத்தகம் மீண்டும்
படித்த திருப்தியுடன்
கீழே இறங்கி வர..
அங்கே வாசலில்
நாளை நண்பர்களுக்கு கொடுக்க
கை நிறைய பரிசும்
மனம் வழிய நட்போடு
சாரதாவும் முக்ஹர்ஜியும்....

அவர்கள் இருவரும்
ஒரே குரலில்,
"Deiiiiiiiiiiiii VP" என அலற
மறுபடியும் தொடங்கியது என்
சிகாகோ பயணம்!


Tuesday, July 28, 2009



என் முதல் ரசிகைக்கு...


மழையின் சத்தமான இரைச்சல்களில்
என் இதயத்தின் அழுகைகள் ஊமையாகி போகின்றன

பெயரிட முடியாத சிறிய உதவிகள்
உருவாக்கிய நம் உறவு மாளிகையின்
முற்றத்தில் அமர்ந்து
உரையாடி கொண்டிருந்தோம்!

நீ மறவாதிருக்க என் மூளையில்
உன் நிகழ்வுகளை பதிவு செய்து வைத்தாய்..
பதிலுக்கு என்னை உன் இதயத்தில்!

நம் பேச்சு கேட்ட
தொலைபேசியின் கம்பியில்
ஒன்று,
பொறாமை தீயில் அறுந்து போனது
தெரிந்து அலைபேசிக்கு மாறினோம்
நினைவிருக்கிறதா?

ஒரே பாதையின் வேறு திசைகளில்
பயணிக்க தொடங்கும் வேளையில்
என் செவியின் மடல்களில் இதழ் பதித்து
அழுத்தி சொன்னாய்,
"i miss u dear"

காலத்தின் காதல் மயக்கத்தில்
களவாட கொடுத்தாய் நம் அனுதின
சுவாரசியங்களை...

மீட்டு எடுக்க நான் செய்த
முயற்சிக்கு தவறான திருநாமமிட்டு
தெருவோர புழுதிகளோடு
துரத்தினாய்

தடித்து போன வார்த்தை தணலில்
வெந்து தணிந்து விழுந்தது நம்
இதயம் இணைத்த பாலம்

இரண்டு வருடங்கள் இழைத்த தறியை
இரண்டொரு நிமிடத்தில் கிழித்து விட்டேன்!

உறவின் நண்பன் - அன்பு...
எதிரி - அளவு மீறிய அன்பு...

கைப்பிடி அற்ற கத்தி கிழித்த கரமாய்
எல்லை தாண்டிய என் அன்பு பதம் பார்த்த
உன் ஈர நெஞ்சம்...

உன் பேச்சு திறக்காத பொழுதுகள்
உயிர்க்கு வலியை அறிமுகம் செய்து
வைக்கிறது!

சற்று முன் பொறை ஏறும் போதும் அன்று
என் கேசம் நீவி விட்ட உன் ஸ்பரிசம்
சில மணித்துளிகள் என் முன்
வந்து போனது.

இப்போதெல்லாம் உன் தாலாட்டு மறந்து
நான் கண் வளர்கின்றேன்.
என் பூபாளமின்றி நீ
கண் திறக்கின்றாய்.

மேகநீர் கன்னம் நனைக்க மறந்தாலும்
கோபம் கொள்ளுவதில்லை பூமி!

உண்மையான உறவு எதிர்பார்ப்புக்கு
இட ஒதுக்கீடு கொடுப்பதில்லை,
கொடுத்தபின் அது
உறவே இல்லை - அங்கு
உறவே இல்லை!

நீ முன்பு எனக்காக கொடுத்த
வாழ்த்து அட்டைகள்
மெளனமாக இதைதான்
சொல்லிக்கொண்டு இருக்கின்றன!

ஏதோ ஒரு தருணத்தில் இதை
படிக்க நேர்ந்தால் - படித்தபின்
உன் காயங்கள் ஒரு வேளை
குறைந்து போனால் - உடனே
என்னை தொடர்பு கொண்டு சொல்லுவாயா,
"HI DA" ?