Tuesday, July 28, 2009



என் முதல் ரசிகைக்கு...


மழையின் சத்தமான இரைச்சல்களில்
என் இதயத்தின் அழுகைகள் ஊமையாகி போகின்றன

பெயரிட முடியாத சிறிய உதவிகள்
உருவாக்கிய நம் உறவு மாளிகையின்
முற்றத்தில் அமர்ந்து
உரையாடி கொண்டிருந்தோம்!

நீ மறவாதிருக்க என் மூளையில்
உன் நிகழ்வுகளை பதிவு செய்து வைத்தாய்..
பதிலுக்கு என்னை உன் இதயத்தில்!

நம் பேச்சு கேட்ட
தொலைபேசியின் கம்பியில்
ஒன்று,
பொறாமை தீயில் அறுந்து போனது
தெரிந்து அலைபேசிக்கு மாறினோம்
நினைவிருக்கிறதா?

ஒரே பாதையின் வேறு திசைகளில்
பயணிக்க தொடங்கும் வேளையில்
என் செவியின் மடல்களில் இதழ் பதித்து
அழுத்தி சொன்னாய்,
"i miss u dear"

காலத்தின் காதல் மயக்கத்தில்
களவாட கொடுத்தாய் நம் அனுதின
சுவாரசியங்களை...

மீட்டு எடுக்க நான் செய்த
முயற்சிக்கு தவறான திருநாமமிட்டு
தெருவோர புழுதிகளோடு
துரத்தினாய்

தடித்து போன வார்த்தை தணலில்
வெந்து தணிந்து விழுந்தது நம்
இதயம் இணைத்த பாலம்

இரண்டு வருடங்கள் இழைத்த தறியை
இரண்டொரு நிமிடத்தில் கிழித்து விட்டேன்!

உறவின் நண்பன் - அன்பு...
எதிரி - அளவு மீறிய அன்பு...

கைப்பிடி அற்ற கத்தி கிழித்த கரமாய்
எல்லை தாண்டிய என் அன்பு பதம் பார்த்த
உன் ஈர நெஞ்சம்...

உன் பேச்சு திறக்காத பொழுதுகள்
உயிர்க்கு வலியை அறிமுகம் செய்து
வைக்கிறது!

சற்று முன் பொறை ஏறும் போதும் அன்று
என் கேசம் நீவி விட்ட உன் ஸ்பரிசம்
சில மணித்துளிகள் என் முன்
வந்து போனது.

இப்போதெல்லாம் உன் தாலாட்டு மறந்து
நான் கண் வளர்கின்றேன்.
என் பூபாளமின்றி நீ
கண் திறக்கின்றாய்.

மேகநீர் கன்னம் நனைக்க மறந்தாலும்
கோபம் கொள்ளுவதில்லை பூமி!

உண்மையான உறவு எதிர்பார்ப்புக்கு
இட ஒதுக்கீடு கொடுப்பதில்லை,
கொடுத்தபின் அது
உறவே இல்லை - அங்கு
உறவே இல்லை!

நீ முன்பு எனக்காக கொடுத்த
வாழ்த்து அட்டைகள்
மெளனமாக இதைதான்
சொல்லிக்கொண்டு இருக்கின்றன!

ஏதோ ஒரு தருணத்தில் இதை
படிக்க நேர்ந்தால் - படித்தபின்
உன் காயங்கள் ஒரு வேளை
குறைந்து போனால் - உடனே
என்னை தொடர்பு கொண்டு சொல்லுவாயா,
"HI DA" ?

3 comments:

Anonymous said...

"உறவின் நண்பன் - அன்பு...
எதிரி - அளவு மீறிய அன்பு..."

அருமை! அருமை!!

கால இடைவெளியில், உனக்கும் உன் நண்பன் (அ) நண்பி ‍க்கும் "அளவு மீறிய அன்பில் இருந்து அளவான அன்பாக" மாறியிருக்குமே! நண்பரிடையே இதெல்லாம் சகஜம் இல்லையா? முடிவில் அதை சொல்லியிருக்கலாமே!

‍ஆனந்தி

Anonymous said...

where are the other poems

ஞானவதி அசோகன் said...

Kavithai nandru. Anonyous Ananthi yin comment adhaninum nandru.