Thursday, February 05, 2009

தொலைந்த நட்பு

உன் அறிமுகம் கிடைக்காது போயிருந்தால்
பிடித்தமான ஏதோ ஒன்றை
கண்டிப்பாய் இழந்திருப்பேன்!

உனக்காக கவிதை எழுத
என் கைகள்
காகிதம் தொடும் முன்
எண்ணங்கள் முன்னமே
அமர்ந்து கொள்கிறது!

பல பெண்களுக்கு மத்தியில் தன் தாய்
அறியும் பிள்ளையாய் என் தோழியாய்
உன்னை அறிந்தேன்...

கண்டதும் காதல் நேருமோ
தெரியாது ஆனால்
நட்பு சாத்தியம் - அதற்கு
நாமே உதாரணம்!

நட்பு கோப்பை வழிய
தேநீர் பேச்சுக்கள்

நான் நீ பேதம் கலைத்த
நீண்ட உரையாடல்கள்

இசையும் தமிழும்
இணைத்த பொழுதுகள்

மனம் பேச
உதடுகள் உறங்கிய
இரவுகள்!

இப்படி நான் சொல்ல
இன்னும் எத்தனை எத்தனை
சந்தர்பங்கள்?

ஒரு இதயம் இரண்டு
உயிர் தாங்குமோ?
உன் உறவு கொடுத்த
கேள்வி இது

என்றும் இருந்திடும் நம் நட்பு
என்ற எண்ணத்தில் விழந்தது
எரிதழல்

பிழை செய்தேனே
உன்னை பிரிந்து போக
காரணமாகி...
என் நெஞ்சம்
ரணமாகி...

விழிகளும் வார்த்தைகளும் மறுக்கப்பட்ட
நம் உறவுக்கு இனி இதயங்களே
சிறைச்சாலை!

எழுதி எழுதி அழிக்கும்
கவிதை போல
வந்து வந்து போகும்
உன் நினைவுகள்...
அதற்கு
இடம் கொடுத்து
தள்ளி படுக்கும்
இமைகள்!

கைகோர்க்கும்
விரல் எங்கே?
என் தமிழ் சுவைக்கும்
உன்னிதழ்கள் எங்கே?
நட்பு பேசும் உன்
கண்கள் எங்கே?
என் கோபம் தணிக்கும்
உன் சொற்கள் எங்கே?

உள்ளம் தவிர்த்து நீ பேசும்
உன் இன்னொரு ஜீவன்
இங்கே ஏங்கி தவிக்கையில்
உடனிருந்து மறைந்து இருக்கும் உயிராய்
நீ இருப்பது எங்கே?

இனி
நீயல்லா பயணங்கள்
தொலைபேசி அழைப்புகள்
காரணமில்லா கோபங்கள்
மணிக்கொரு முறை
உன் முக தரிசனம்
எதுவும் இல்லாத
ஊனமான வாழ்க்கையாய்
மாறக்கூடும்!

தள்ளி இருக்கையில்
சேர்ந்து இருந்த தோழி
அருகில் இருக்கையில்
தொலைவாகி போனாயே
பின்பு
தொலைந்தும் போனாயே!

பிழை காம்பு தாங்கும்
என் கவிதை மலர்
முகர இல்லாது
போனாயே
என்னை ஏமாற்றி
சென்றாயே!

நான் கவி கிறுக்க
காரணமானவளே
இன்று கவிஞனாய்
நானிருக்க காணாது
போனாயே!

மறுபிறப்பு என்பது நிஜமென்றால்
இம்முறை பிரிவு
தோற்று போக,
மாறாத நம்
உள்ளமும் முகமும்
கொண்ட அதே
உறவு வேண்டும்!

இருள் தேடும் விடியலாய்
எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
உன்னை வரவேற்க
கையில் ஒரு
பூங்கொத்தோடு!!!