Saturday, March 06, 2010

இன்னொரு காதல் கதை...

இரவின் அழகை வாசிக்கும்
மெழுகுவர்த்தியின் நாவை
நறுக்கும் காற்றாய்
காலம் 
உடைத்த 
காதல் தாழி  

காதல் பத்மவியூகத்தில் நுழையும்
மன அபிமன்யுகள்
மணக்கதவைத்
திறக்கும் முன்னே
மாய்ந்து போக,
பிரிவின் வெளிச்சத்தில் புதிதாய்
சிக்கிய விட்டில் பூச்சிகளாய்
நாம்!

நிலக் காதலிக்கு
மரம் தரும்
இலை முத்தங்களாய்
பரிமாறப்பட்ட பாசங்கள்
சத்தமின்றி சருகுகளாய்
புதைக்கப்படுகின்றன!

ரசவாதமா? ரசாயன மாற்றமா?
அறியோம்...
இடைவெளி பள்ளத்தாக்குகளில்
நம் காதல்
செய்த தற்கொலை
செய்தி கேட்டு
உறைந்தோம் ஒன்றாய்..

ஓய்வறியா செவிகளும் இதழ்களும்
ஓயாது நன்றி சொல்லும்
என் உயிர் தழுவிய
உன் உறவின் உயிர்த்துறவுக்கு

வளைக்கரம் வளைத்த என் தோள்கள்
வேறொருத்தியின் தீண்டலுக்கு
தயாராக...
உன் இமைக் கதவுக்குள்
நசுங்கி விட இன்னொருவன்
காத்திருக்கிறான்
நானும் என் மனைவியும்
உன்னோடு எடுத்த
"புகை"ப்படத்தில் தெரியும்
காதல் "நெருப்பு" மறைந்த
தடம்!

காதல் மயக்க உரைகள் யாவும்
மது போதை உளறல்களாய்
மாறிப் போனதே!

வருடங்களை வினாடியாய்
மாற்றிய மந்திரமே!
வேண்டாத போது
விருந்தளித்தாய்
வேண்டிய போது
விலகிக் கொண்டாய்...

என்னை மடியில் கிடத்தி
சொர்க்கம் சேர்ப்பித்த
பெண்ணே,
நரகம் மட்டும் நான்
காண நீ எங்கே
சென்றாய்?

இந்த நரன் இங்கே
கிழிக்கப்படக் காணாது
அங்கே நீ
நஞ்சமுது உண்கிறாயோ?

என்னை நனைத்த உன்
அலைகளில் நான்
மூழ்கிப் போவேனோ?
பயத்தின் பசிக்கு
நீ இரையானாய்…
இறையை நம்பாது
ஆதலால் நம் மனிதக்காதல்
இனி அமரக் காதலாய்...

நிழலாய் மட்டும் இருக்கும்
நிஜமே!
எது நீ?
நேற்றா? இன்றா?
நாளையா?

வேண்டாப் பக்கத்தைத் தாண்டும்
புத்தக விழிகளாய் பழக்கப்படுத்தி
எதார்த்தம் என்று
மொழிவது சரியோ?

நிகழ்வுகள் நிரப்பி கொண்டே வந்தாலும்
நினைவுகளை சரிபார்த்து கொண்டு வரும்
சூத்திரம் என்ன?

வாழ்க்கையின் பகுதி
காதலென்று விளம்பும்
ஞானிகளே!
வந்து என் நினைவுகளை
கழற்றிப் போடுங்கள்
செய்தால் உங்களுக்கு
திருஷ்டி சுற்றி
நான் போடுகிறேன்!

4 comments:

ஞானவதி அசோகன் said...

Hi Prasad,
How intellectually you expressed your emotions!It reminds me of Wordsworth who says "Poem is a spontaneous overflow of emotions in tranquility."
Words are so apt-especially theendal n nasungipoga! If it reflected truth, God would make you experience ecstasy
n make you share the sweet!Title reminds "Theeraadha vilaaiyaau pillai!"

ராஜி said...

உங்கள் ஆழமான உணர்வுகளை அழகான கவிதையாக வாசிக்க முடிகிறது.....

நிலக் காதலிக்கு,
காதலை சொல்லி,
"புகை"ப்படத்தில்,
நிழலாய் மட்டும்,
வேண்டாப் பக்கத்தைத்,
நிகழ்வுகள் நிரப்பி கொண்டே,

வரிகள் மிகவும் நன்றாக உள்ளது...

Great VP... Keep going...

Anonymous said...

வார்த்தைகள் உன்னிடம் விளையாடிய காலமும் போய், வார்த்தைகளுடன் நீ விளையாடிய காலமும் போய், சரளமாக ஆள துவங்கி விட்டாய். வாழ்த்துக்கள்.

-ஆனந்தி

Unknown said...

Super VP.. very impressive..