
இருவர்
ஒரு மழை நாளில் தொடங்கியதுநம் நட்பு!
இருவருடைய இச்சைகளின்
எச்சங்களாய் நீங்கள்!
கவனக்குறைவு
கருவறை கதவு
திறந்து விட்டது!
ஒண்டுக் குடித்தனத்திலிருந்து
மிக பெரிய பிரபஞ்சத்திற்கு
கிரகப்பிவேசம் செய்தீர்கள்!
மணம் முடிக்காது மழலை கொண்டதால்
மாயத்து கொண்டாளோ மறத்தமிழச்சியாம்
உங்கள் அன்னை?
முதல் காட்சியாய்
உயிரற்ற உங்கள்
தாயின் முகம்!
"அரசு தொட்டில் ஆறறிவுக்கு மட்டும்" - என்றே
எங்களின் ஓரறிவுக்கு எட்டியது
தேசாந்திரம் சென்றிருந்த வான் மழை
திடீரென்று வீடு திரும்பியது!
குளித்து முடித்தும் குடிக்க கூழ் இல்லை
கசக்கி கட்ட ஓர் கந்தலும் இல்லை!
வண்டிக்கு உடை கொடுத்த மக்கள் - உங்கள்
வயிற்றுக்கு உணவு மறுத்தனர்!
குளிர் தாங்கா பிஞ்சென்றும் பாராமல்
விரட்டபட்டாய் ஒவ்வொரு வீட்டிலிருந்தும்!
கால் அழக்கு ஏற்கும் துணியிலும் உங்கள்
உடல் அழக்கு படாது பார்த்த
உத்தமர்கள் நாங்கள்!
ஆயிரம் சதுர அடியில்
அரை அடி தர மறுத்த
அன்பு தெய்வங்கள் நாங்கள்!
உடனிருப்போர் உள்ளம் புரியா
உயிருள்ள பிணங்கள் யாம்
உங்கள் தேவை அறிவோமா?
அலுவல் திரும்பிய ஆதவனால்
அன்னையின் கதகதப்பு அடைந்தீர்!
பசியென்று சொல்ல
மொழியும் திராணியுமின்றி
தவித்தீர்!
கடைசியாய்,
என் வீட்டு மாடிப்படி
உங்கள் படுக்கை அறையாய்
மாறி போனதில் மகிழ்ந்து
இருந்தேன்
மறுநாள் சாலையோரத்தில்
சமாதியாய் உங்களை
காணும் வரை!
சொர்க்கம் சேரும் வரை
உண்பதற்காக எடுத்து செல்லுங்கள்
உம்மிருவர்க்காக
நான் வாங்கிய இந்த
பிஸ்கட் துண்டுகளை!