Saturday, January 05, 2013

Poem on Narasima swami


குருவென்னும் முதல்
வரி தேடிய கவியே - உம்
கவிதையாய் கனியவே
காத்திருந்தது அக்கருணையே!

இருள் மேகச்சிறையில்
இன்னல்பட்ட 
இறவா வானம்
வளியின் வருகையில் 
விடுதலையாக...
நன்றி சொல்லும்
நானிலமாய்
நாங்களும் சொல்லுவோம்
நாளெல்லாம்!

கல்லில் கடவுளை
காணும் சிற்பியின்
உளி - மலர்
சாத்திய சமாதியில்
புலர்ந்தது கிழக்கின்
ஒளி! 


காலைச் சுற்றிய
கர்மவினையெல்லாம்
காலாற நடந்தே
கடந்தாய்!
தொடர்ந்த தொல்லையை
தொலைக்கவே
அவரைப் 
பற்றித் தொழுதாய்!
அவரைப் பற்றி
தொகுத்தாய்!

சீரடி சுமந்த    மாமணி 
மயிலையின் மடியில்
தவழ்ந்திட...
மண்வாசம் பரப்பும்
மழையாய் மனம்!

பாபாவின்  வாழக்கை வீணையை 
விரல் ஐந்தும்
வாசிக்க 
விளங்கியது 
புனிதனின் சிறப்பு 
விளைந்தது 
பக்தியில் மதிப்பு

சங்கம் வளர்த்த  இயல் இசை நாடகம்
சாயை வளர்க்க
இசைய
தான் நுகர்ந்த 
நறுமணம்  நாடெல்லாம் 
பரவ..
என்ன தவம் செய்தனை 
இவரை நாம் பெற?

புள்ளிகள் புள்ளினங்களாய்
பொலிவு பெற
புவியெல்லாம் 
வலம் வர 
புத்துயிர் பெற்றது 
பக்கிரியின் புகழ்!

மண்ணை மனிதனாக்கிய 
மூர்த்தியின் கீர்த்தியை
மண் திங்காது
காத்து 
வான் புகழ்
கொண்டாய்!

அடைந்த மெய்பொருளை 
அகிலத்தோடு பகிர்ந்து
அருளிய உங்களை
காணாது போனோமே
நாங்கள்? 
அது சரி,
உள்ளே வசிக்கும் 
உயிரை காணாவிடின் 
கவலைக் கொள்ளுமோ
உடலின் விழிகள்?

No comments: