Saturday, January 05, 2013

ஷீரடியில் ஒரு நாள்! 

அன்றைய வெளிச்சம் வாங்க 
கோமகன் வாசலில் 
கண்கள் சிவக்க
ஆதவன் காத்திருக்க..  

கரு மணிகள் இரண்டும் 
இமைக்கதவின் 
தாழ்ப்பாளை திறக்கும்..
கவிதை நயனங்கள்
காலைப் பூக்களாய் விரியும்!

உடைந்த மசூதி உறைவிடம் - உள்ளே 
விடாது எரியும் விறகுகள்...
சாக்கால் செய்த படுக்கை - தலை
சாய்க்க தோதாய் தலையணை ...
தோளை தொடும் தலைப்பாகை 

தோய்க்க மறந்திருக்கும் ...

அழுக்கை அணிந்திருக்கும் கஃபினி 
அதுவும் அங்கங்கே கிழிந்திருக்கும்! 

தரித்தரனாய் தோன்றும் தோற்றம் - இவனை 
தரிசிக்கவே  தெரியும் இறையின்
இன்னொரு தோற்றம்!


பானை நீரை பாய்ச்ச வரும் 
பொழுதை நோக்கி 
மடல் மேனியில்  
வேர்வை துளிகளோடு
தாகத்தில் பூக்கள்!  

காய்ச்சிடாத மண்பாண்டம் 
இரண்டு
கடன் வாங்கி 
கருணையும் நீரையும் பரிமாற
வயிறு நிறையும் வேர்களுக்கு!



பிரபஞ்சமாய் விரிந்திருக்கும் 
பழுத்த ஆலமரத்தில் 
இளைப்பாறும் பறவைகள் - தன்
இல்லத்தில் பிச்சை 
ஏந்தும்  
பெம்மானுக்கு உணவிட
இறந்து போகும் 
முன் ஜென்ம 
பாவங்கள்!


பேசா பறவைக்கும்
பேசும் உயிர்க்கும் 
பகிர்ந்த பின் பசியாறுகிறான்
புவி காக்கும்
பரமன்!
புவிக்கு ஆக்கும்
பரமன்!


குழந்தை குறும்பும்

அன்னை கோபமும்

அன்பின் முள்ளை 
நேர்க்கோட்டில் நிறுத்தும் 
தராசு தட்டுகள்  !

கொழித்த செல்வமும் 
கெளபீனத்தை வணங்கும்... 
மெத்த படித்த அறிவும் 
மௌனத்தை மட்டும் பேசியிருக்கும்...
அதிசயங்களும் அரங்கேறும்
அவன் தர்பாரில்!


மக்களோடு மக்களாய் வாழ்ந்தும்   

மாயை மழையில் நனையா நெருப்பு...

கசக்கும் வேம்பின் அடியில் 
காலை மடக்கி 
அமர்ந்திருந்த கரும்பு! 

மாலை மஞ்சள் மலர்களால்
தொடுத்த மாலையை 
இரவு எடுத்துவர 
எண்ணெய் விளக்குகள் 
ஏற்றிய 
துவாரகமாயி எழிலில் 
காணாது போகும் 
மதியின் வதனம்!

தேனை கூடும் 
தேனீக்களின் ரீங்காரத்தில் 
தலைவனும் தன்னை 
மறக்கிறான்!
சலங்கைகள் கட்டி 
சத்தமாய் ஆடி 
பாடுகிறான்! 

பாதங்களின் ரேகைகளாய் 
பக்தர்களில் சிலர் 
தங்கிவிட... 
பாதம் சேவித்து
ஏனையோர் புறப்பட...
உதி பிரசாதமளித்து 
வாசலுக்கு வந்து 
வழியனுப்பும் காட்சி
வெளிப்படுத்தும் அவன் 
உள்ளத்தின் நீட்சி! 

உடலோ, உள்ளமோ
ஊனப்பட, 
உதவியென
தேடும் தலைவனை..

தொலைவோ, தொடும் தூரமோ
தொடர்புக்கொள்ள தடையில்லை.. 

நம்பிக்கையோடு நெஞ்சத்தில் 
நினைத்தாலே
நீர்த்துப் போகும் பிரச்சனைகள் 
நிறைவேறும் நியாயமான பிராத்தனைகள்! 

வினாக்களுக்கு விடையாகி 
விடையில்லா வினாவுமாகி 
வானமாய் வளர்ந்திருக்கும் 
கொற்றவனைக் கொண்ட 
ஷிர்டி கொடுத்த வைத்த
ஊரடி!  

No comments: