Saturday, July 19, 2014

அப்பாவிற்கு ஒரு அஞ்சலி

பன்னிரண்டு ஆண்டு கழித்து 
பாபாவின் மோன நிலை கலைய 
பௌர்ணமி தோன்றும் நேரத்தை நோக்கி 
நகத்தை கடித்தபடி 
காத்திருந்தது மண்

உள்ளே உருண்டு கொண்டிருப்பது 
உலகாளும் பெருமாளின் 
உள்ளாளும் பெருமாள் என 
கருவுற்ற தாய்
அகம் அறிந்தது  
நா நகல் எடுத்தது 

பிறக்கும் போதோ 
பால்யத்தின் போதோ 
பதின்மத்திலோ 
புலப்படவில்லை -
பாபாவின் செல்லப்
பிள்ளை இவரென்று 
பின்னாளில்  புரிந்தது 
பாபா இவருக்கு செல்லப் 
பிள்ளை என்று 

உயிர்கள் விளையாட 
பிரபஞ்சமெனும் வீடு 
செய்தான் இறைவன் 

அவன் விளையாட 
ஆலயமெனும் வீடு 
செய்தான் அடியவன் 

எண்ணம் வானமாகும் நேரம் 
எல்லாம் நம் காலடியில் 
சீரடி வாசனுக்கு இன்னொரு 
சீரடி கிடைத்தது 
கௌரிவாக்கத்தில் 

சேவை செய்ய வருபவனை பார்த்து 
சேவலும் விழி திறக்கும் 
செந்நிற ஆடையில் மேனி 
காலைக் கதிராய் மின்னும் 

அவன் அவருக்கு கொடுத்தது 
ஒரு பிறப்பு 
அவர் அவனுக்கு கொடுத்தது 
ஒவ்வொரு நாளும் 
ஒரு பிறப்பு 

அமர்ந்த நிலையில் 
ஆழ்ந்து உறங்குபவனை 
அன்னைக்கரம் வருட  
மெதுவாய் திறக்கும் 
நாளின் இமைகள் 

தாயாக நீராட்டி 
தலை துவட்டி 
அணியாய் அலங்கரித்து 
அமுதூட்டிய பின் 
அவனெதிரேலியே  
அமர்ந்து கொள்ளவார் 
சேயாக 

விடாது நோக்கும் கடலின் வண்ணத்தை 
வானம் காட்டும் சில நேரம்.
இவர் உடம்பிலும் 
அவ்வப்போது  
அவனின் முகம் 

மன அலைகள் மேலெழுந்து மேலெழுந்து 
விழிக்கரை நனைக்கும் 
உணர்வு நுரைகளில் 
கிளிஞ்சல்கள் கண்டெடுத்தே 
கரையும் பொழுதுகள் 

இதழ்கள் பிரிவதில்லை - அவ்விரு 
இதயங்கள் அகல்வதுமில்லை 
விழிகள் நான்கும் பேசுகையில்  
உதடுகள் என்பது உபரியே 

காய்ந்த நிலத்தில் 
புல் கூட முளைப்பதில்லை 
காய்ந்த வயற்றில் மட்டும்
பக்தி முளைக்குமா?

ஆலயம் சமைத்த நாளிலிருந்து 
அன்னமும் சமைய தொடங்கியது 
பசியென்று வந்த நின்ற எவரும் 
புசிக்காமல் போனது கிடையாது 
பசி அடங்காமல் போனது கிடையாது 
கருவறைக்கு பிறகு
அதிகம் விளக்கு எரிந்தது  
அடுப்பங்கரையில் தான். 

சுருதியும் லயமும் போதுமோ? 
ஸ்வரங்கள் வேண்டாமா? 
இனிப்பை சேரும் எறும்பாய் 
இவரை அடைந்த பிள்ளைகள்.. 
அகங்கள் நெருங்க நெருங்க 
அப்பாவின் தர்பார் 
அணுவென விரிந்தது 

ஒவ்வொருவருக்கும் ஒரு பணி 
இழைந்து இழைந்து செய்ய 
ஒவ்வொரு நெஞ்சிலும் பனி  
இங்கே
விதை ஒன்று 
விருட்சம் ஒன்று 
கிளைகள் நூறு 

இலக்கணங்கள் தேவையில்லை 
இளகும் மனது போதும் 
இவர் சன்னிதானத்தில் நுழைய ..

இயற்கையின் விதிகள் 
இயற்றியவனுக்கும் பொருந்தும் 
என்பதே விதி 

தள்ளி நின்றே ரசித்திருந்தவனை 
தனகத்தே கொள்ள விழைந்தான் 
வெய்யோன் 
தளிர்களின் பிடியில் 
தளர்ந்தது தலைவனின் 
பிடி  இரண்டு ஆண்டுகளுக்கு..

இனியும் பிரிந்திருக்கலாது என எண்ணி 
எடுத்துக் கொண்டான் அவன் பிள்ளையை
தந்து விட்டோம் எந்தையை..

கண்ணா என பனித்திடும் கண்ணும் 
கவலை தீர்க்கும் கரமும் 
காதலோடு ஆடும் கால்களும் 
கானல் நீராய் போனதே... 

உதிர்க்கின்ற திருவாய் மொழியும் 
உவகைமிகு ஆர்த்தி பாட்டும்  
உதி பூசும் காட்சியும் 
வெறும் கனவு தானோ 
இனி? 

அம்மா என்ற வார்த்தைக்குள் 
அகிலமே அடங்கும் - ஆனால் 
அப்பா என்ற சொல்லுக்குள் 
அம்மாவும் அடங்கும் 

தோன்றிய நாள்தொட்டு 
தழுவ காத்திருந்ததை போல் 
ஓடி வந்த அனலைக் கண்டு 
கனலானது கண்கள் 

வீட்டை நீங்கிய பிள்ளை 
மீண்டும் வந்ததை நினைத்து 
மேகமெல்லாம் மழையாய் சொரிய 

இவரோடு எம் காலம் இருந்தமைக்கு 
இதயமும் கை கூப்பி நன்றி சொன்னது 

முடிந்த இரவை தொடர்ந்த உதயத்தில் 
உண்மை நிறைத்தது உள்ளத்தில்... 
சூரியன் உதிப்பதும் இல்லை 
மறைவதும் இல்லை 


கௌரிவாக்கம்  பாபா கோவில் அப்பாவிற்கு

No comments: