Saturday, July 19, 2014

சிறகு முளைக்கா சிட்டுக்குருவி

மண்ணால் செய்த 
ஒவியத்தை 
முடிக்கும் முன் 
அனுப்பிவிட்டான்
மேலே உள்ளவன்
மண்ணில் உள்ளவர்கள்
முடிக்கும் முன்னர்
மீண்டும் அவனே
எடுத்துக் கொண்டான்

வருடம் பல கடந்து
வயிற்றில் வந்த பிறையே
முழுமதியாய் முளைக்கும்
முன்னமே
பூமியில் தோன்றி விட்டாய்
முப்பது நாள்
முழுதாய் முடியவில்லை
வந்த இடத்திற்கே
சென்ற்து ஏனோ?

குவிந்த கரத்தோடு
சிவந்த பாதங்கள்
சிரசால் நடப்பதை
ரசித்து ரசித்து
இரவெல்லாம்
பகலாய் விழித்திருந்தேன்

அம்மாவென்று அழைக்க
வந்தவனே
இரண்டு மாதம்
பொறுத்திருக்கலாமே
அடம் பிடித்து
வெளியில் வந்தது
நீ தானே

மார்பின் காம்புகளில் உன்
ஈர உதடுகள் பதிய
பால் பருகாது
மீளாத் துயிலால்
பகலையும் சேர்த்து
இரவாக்கி போனாயே

வெறும் வயிறோடு
வெளியில் கூட
புறப்பட தகாது - நீ
வேறு உலகம்
செல்வது தகுமோ ?

கண்கள் விரிக்கவும்
காலால் உதைத்து
அழவும்
பழகவில்லை
ஆவி விடுத்து
அசையாது இருக்க
மட்டும் எங்கே
கற்றாய்?

இன்றலர்ந்த மலர்
விழ்ந்தாலே வலிக்கும்
உன் தேகம்
எப்படியப்பா பொறுப்பாய்
இருட்டையும் எரிக்கும்
நெருப்பை?
இதற்கு உன்னை
சுமக்காது இருந்திருக்கலாம்
என் கருப்பை!

அக்கினிக் குஞ்சு
அறியுமோ
அது எரிக்க போவது
அன்னையை கூட
அறிந்திடாத
மழலை பிஞ்சு
அறிந்தால் எரியாதோ
அதற்கும் நெஞ்சு!

சுவாசிக்க தெரியாத ,
சுவாசப்பை
சரியாக வளராத
சிட்டுக்குருவியின்
சுவாசம் எடுத்தது
சரியோ ?

நான் கருவுற்றிருக்க
கடவுளை கேட்டு கேட்டு
கடைசியில் கடவுளாகவே
மாறிய என்
அன்னையே!

தாய் வீட்டிற்கு
தலைப் பிள்ளையொடு
வருகிறேன்
வழியில் அவன்
உயிரை தொலைத்து
விட்டு!

மகளின் பிள்ளையை
தாய் வளர்ப்பது - நம்
மண்ணின் வழக்கம்
மகனை அனுப்பி
வைத்திருக்கிறேன்
பத்திரம்!

No comments: