Saturday, July 19, 2014

01 - பாபா - ப்ராத்தனை

உள்ளத்தின் தேவைகள்
உள்ளங்கையில் அடங்குவதில்லை 
எல்லையற்ற அவனிடம் விண்ணப்பிக்க 
எல்லையற்ற ஆசைகள் இருந்தும் 
எழுவதில்லை இதயத்தின் நாக்கு 
மழை மேகத்திடம் 
குவளை தண்ணீர் கேட்க 
தோன்றுமோ?
காலக்கடலின் கணக்கில்லாத அலைகளில் ஒன்று 
உதறிய ஒரு துளி நீரே உலகமென உணர்ந்தும் 
கண்ணிமைக்கும் நொடியில் கலைந்து விடும் 
கனவே வாழ்வென்று அறிந்தும் 
காம குரோத லோபங்கள்
கடித்து திங்கும் கண நேரமும்..
மண்ணில் மெய் மறையும் முன் 
மறையில் மனம் மறைய செய் 

எனது என்ற நெருப்பு இடையிறாது எரிந்து வர 
கறைபடிந்து கிடக்கிறது இதய சுவரெல்லாம் 
உதவியென்று வருபவை எல்லாம் சந்தேகக்கல்லில் 
உரசிப் பார்த்த பிறகே செய்யப்படுகிறது 
கலியின்  புயலில் அணைந்திடுமோ
கருணையின் தீபம்?
பேசா உயிரின் பசியை தணித்தவனே 
பேசும் எங்களின் மனப்பாசியை  நீக்கு 

குறையில்லா இயற்கையின் தானத்தைக் பெற்றும்
நிறையாத மானிட குடம்
குறைப்பட்டு கொண்டே இருக்கிறது தன்னில் 
குறைந்தவரை கண்டும்
ஒப்பிட்டு பார்த்து ஒப்பிட்டு பார்த்தே
ஓய்ந்து போகின்றன
கோதுமை அரைத்த கரங்களே - எங்கள் 
பேதைமை அரைக்க வா 

எல்லாம் நீயே என தெரிந்தும்
எப்பொழதும் உன்னை பார்க்க முடிவதில்லை
எதிலும் நீயே என புரிந்தும்
என்றும் உன் நினைவாய் இருப்பதில்லை
நிதமும் வெல்லும் மாயயை
நிரந்தரமாய் வென்றிட
உபாயம் உரைத்திடு
சரீர நிழலில்
சீரடி தெருவில் உலவிய 
நிர்குண பிறை - எங்கள் 
சரீரம் சாய்ந்த பின்னும் 
சிந்தையில் நிறை

No comments: