Saturday, July 19, 2014

உறங்கும் முன்
உன்னை தரிசிக்க
வாசல் பார்த்திருக்கும்
விண்மீன்கள் -
உன்னை மேவும்
கற்பனையில் உறக்கம்
தொலைக்கும் பூக்கள்
வின் அங்கம்
தழுவ  காத்திருக்கும்
வின் அமுதம்

இருத்தலை தாண்டி
இல்லை வேறு வரம்
என்றறியா மக்கள் கூட்டம்
இன்னும் இன்னும் என
வேண்டிக் கொண்டே
இருக்கிறது

கதி மோட்சம் காண
குறுக்கு வழி தேடும்
கிறுக்கு உலகம்
கடவுளை அடைய 
கடவுளிடமே
கடவுச்சொல் கேட்கும்

குறைகளும் குழப்பங்களும்
நிறைந்த வாழ்வில் - அடைந்த
நிறைகளும் ஞானமும்
கானல் நீரினும் குறைவு - அதற்கு 
நன்றி சொல்வது அதனினும் 
குறைவு!

ஓயாத அலைகடல் மனம்
ஓய்வெடுக்க உண்டு
ஒரு மார்க்கம்- அது
பாபாவின் நாம
ஸ்மரணம்

அஷ்டாங்க யோகமும்
அகம் நோக்கும்  தியானமும்
அவசியமில்லை
புலன்கள்  போற்ற
புலராதோ அகத்தின்
கிழக்கு?

அழுக்காடை உடுத்திய அவதாரம்
அவனியில் அவன் ஏற்ற அரிதாரம்
தெரியாது அவனின் தாய் தந்தை
புரியாதோ அவனே நம் தாய் தந்தை

பால்வீதியும் சேவிக்கும் பாதார விந்தங்கள்
பகல் உணவுக்கு சுற்றியது மண் வீதியில்
இரை கேட்டு வந்தவன்
இறை என்று உணராது
உள்ளதை கொடுத்தவர் பலர்
உள்ளத்தையும் கொடுத்தோர் சிலர்

ஆகாரமோ ஆன்மீகமோ
அனைத்தும் வைக்கப்படும்
பொதுவாய்
கொள்பவர் கொள்ளலாம்
அவரவர் விருப்பம்
கதவு கிடையாது
அவன் அரண்மனையில்
நடமாடிய நாட்களில்
நடத்திய நாடகங்கள்
ஏராளம் ஏராளம்
நிலையாய் கொண்ட பின்
நிகழ்த்திய அதிசயங்கள்
தாராளம் தாராளம்

ஆத்ம ஒளி அளிப்பவனுக்கு
அகல் ஒளி பிடிக்கும் - பிடிக்காத
பனியாக்கள் எண்ணெய் மறுத்தால்
துனி என்ன தூங்கியா விடும்?
இணையாத தண்ணீர்
எண்ணெயோடு இணைய
மசூதி இருளும்
மன இருளும்
மறைந்தது ஒன்றாய்


இறைவன் படைத்த
மனிதர்கள் படைத்த 
மதத்தில் இவனை 
அடைக்க முயன்று 
தோற்பவர்க்கு தெரியாது
மண்ணில் வரும் 
மழைக்கு நிறம் 
கிடையாது என்று!

வாய் பேசா உயிரின் 
வயிற்று ஈரம் 
காக்கும் 
அடியவர்கெல்லாம் 
அடிமையாகும் இவன் 
அன்பின் ஈரம் 

பிராத்தனைக்காக குவியும் 
கரங்களை விட - பசித்தவர்க்கு 
பரிமாறும் கரங்களில்  
பிரியம் உள்ளவன் 

ஒரு முறை அவனை நினைக்க 
நம் உயிர் பிரிந்தாலும்
நம்மை மறவான் 
ஆலயம் வாரா  போனாலும்
அன்றாடம் நம்
வழிக் காண வருவான்
வழிகாட்ட வருவான்


தென்றல் விளையாடும்
மரத்தை 
சாய்க்க பார்க்கும் புயலில்
வேர்களை நம்பும்
விருட்சம் விழுவதில்லை
நதியாய் மாறி
அறுக்க நினைத்தாலும்
நம்பிக்கை நங்கூரமாகும்
இடத்தில் கவலைகள் 
நிற்பதில்லை


No comments: