Saturday, January 05, 2013

கண்பொத்தி விளையாட்டு



அறிந்த வார்த்தைகள் அனைத்திலும் 
அர்ச்சித்த பின்னும் அலைபாய்ந்திருக்கும் 
மனம் அறியாது 
மௌனத்தை வெல்லும் 
மொழிகள் முளைக்கவில்லை 
என்பதை


தரையிலிருந்த கல் நான் - அவன் 
தலையிலிருக்கும் கிரீடத்தில் குடிபெயர்ந்தும் 
நிறைவுக்கொள்ளாது தவித்திருந்தேன்
தாகத்துடன் கானல் நீருக்கு.


தன்னையறிந்த தலைவன் - என்
எண்ணம் அறிந்தான் - என்னுள் 
ஞானம் விதைக்க - என்னை 
விந்தில் விதைத்தான் 
நரனாய் நானும் வந்தேன்  
நான் யார் என்பதே 
மறந்தேன்!


நீண்டிருக்கும் வாழக்கைக் கடலில் 
நீரோடையொன்று தமிழ்த் துடுப்பால் 
நீந்தவே 
கைக்கொடுத்தாய் கலங்கரை
விளக்ககாவே...

திசையில்லா தூசியாய் தானிருந்தேன் 
தருவின் திருவடி தொட தனியொரு 
திசை தோன்றிட கண்டேன்

வெண்சாமரம் வீசியவனின் வாழக்கை 

வெற்றிடத்தில் விளைந்தன புகழின் 
வெடிப்புகள் 

ஒன்றுமில்லா பாத்திரத்தில்
ஒரு துளி நெய்யை ஊற்றினாய்  
பொங்கி வந்த 
புகழின் வெள்ளம்
கண்களை மறைக்க
கடவுளை மறந்தேன் 

ஆசைப் பாறையில் என்
அறிவை சாணை பிடித்தேன்
மழுங்கிய முனையே 
மகிழ்ச்சியென்று 
முரசு கொட்டினேன் 


மனம் சேர்த்த குப்பைகள்
மக்க தொடங்கியது - என்
முதுகெலும்பும் பாரம் தாங்காது
முனகியது..


துன்பத்தின் இலையில் பரிமாறும்
அன்னமே இன்பம் 
என் தெளிந்தேன்..

உணர்ச்சி குவியலுக்குள் புதைந்திருக்கும் 
உள்ளம் உதவியென உன்னை அழைக்கிறது 


யோசித்து பார்த்தால்..
என் நாட்குறிப்புகளை நான் 
பிழையின்றி எழுதியதில்லை - உன்னருள் 
திருத்தாமல் இருந்ததில்லை 

சேமித்த கர்ம விறகுகளை - உன்
சன்னிதானத்தில் சேர்த்தேன் 
துனிக்கு உரமாக - பதிலுக்கு
உதி அளித்தாய் வாழ்வின் 
உரமாக... 

மறுபிறப்பறுக்கும் மன்னவனின் பிறப்பறியோம்
மண்ணுக்கும் வேண்டுமோ 
மலையருவியின் மூலம்?

உடல்கொண்டு நீ வரவேண்டாம்...


உன் நிழற்படம் மட்டும் போதும் - என்
நிழலும் நெகிழ்ந்து நீர் சுரக்கும் 

இடர் வந்த போதும்
இடறி விழுந்த போதும் - என்னை
ஏந்திக் கொண்ட இறைவனே..
இனி  
உன் மடியே 
என் உறைவிடம்  

No comments: